யாழ்ப்பாணத்தில் கிட்டு நினைவேந்தல் தொடர்பாக PTA சட்டத்தின் கீழ் விசாரணை கோரி சர்வஜன அதிகாரம் கட்சியின் முறைப்பாடு

யாழ்ப்பாணத்தில் கிட்டு நினைவேந்தல் தொடர்பாக PTA சட்டத்தின் கீழ் விசாரணை கோரி சர்வஜன அதிகாரம் கட்சியின் முறைப்பாடு

0:00 / 0:00
HD
0 views

ஊடக அறிக்கை சர்வஜன அதிகாரம் யாழ் மாவட்டம். 29/01/2026 இலங்கையில் பயங்கரவாதிகளாக தடை செய்யப்பட்ட அமைப்பான புலிகள் இயக்கத்தின் பயங்கரவாதியான கிட்டுவின் நினைவேந்தல் நிகழ்வை நடத்தியவர்கள் , ஒருங்கிணைத்தவர்கள், நிதியுதவி அளித்தவர்கள் மற்றும் பங்குபற்றியவர்களைப் பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யுமாறு அருண் சித்தார்த் யாழ் மாவட்ட பயங்கரவாத தடுப்பு பிரிவில் இன்று (29/01/2026) முறைப்பாடொன்றை மேற்கொண்டுள்ளார். சர்வஜன அதிகாரம் கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளரும் பிரபல் சமூக செயற்பாட்டாளருமான அருண் சித்தார்த் பின்வரும் முறைப்பாட்டை இன்றைய தினம் யாழ் மாவட்ட பயங்கரவாத தடுப்பு பிரிவில் மேற்கொண்டுள்ளார். இயக்குநர் பயங்கரவாத தடுப்பு பிரிவு (TID) இலங்கை காவல்துறை யாழ்ப்பாணம். 29 ஜனவரி 2026 பொருள்: பயங்கரவாத தடுப்புச் சட்டம் (PTA) பிரிவுகள் 2, 14 மற்றும் 15 இன் கீழ் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த நபரின் நினைவேந்தல் நிகழ்வு தொடர்பான முறைப்பாடு கனம் ஐயா / அம்மா 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 16 ஆம் திகதி (16.01.2026) யாழ்ப்பாணம் சங்கிலியன் பூங்காவில், இலங்கையில் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் (PTA) கீழ் தடை செய்யப்பட்ட அமைப்பாக அறிவிக்கப்பட்டுள்ள புலிகள் (LTTE) அமைப்பின் பயங்கரவாத தலைவர்களில் ஒருவரான “கிட்டு” என இயக்கப் பெயரில் அழைக்கப்பட்ட சதாசிவம் கிருஷ்ணகுமார் என்பவரின் நினைவுகளைப் பொதுவெளியில் நினைவேந்தும் நிகழ்வொன்று நடைபெற்றுள்ளது.

அந்த நிகழ்வின் சமூக வலைத்தள ஆதாரங்கள் முகநூல் (Facebook) பதிவுகள் இணைக்கப்பட்டுள்ளன. பல முகநூல் பதிவுகளின் அடிப்படையில், குறித்த நிகழ்வு “போராளிகள் நலன்புரிச் சங்கம்” (Ex-Combatants Welfare Association) என அழைக்கப்படும் அமைப்பின் பெயரில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது. மேலும், அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி முன்னாள் மாநகர சபை உறுப்பினராக செயல்பட்ட வரதராசா பார்த்தீபன் என்பவரின் முகநூல் பக்கத்தில் வெளியிடப்பட்ட காணொளிகள் மற்றும் புகைப்படங்கள், மேற்குறிப்பிட்ட தடை செய்யப்பட்ட பயங்கரவாதியின் உருவப்படங்கள் மற்றும் பதாகைகள், நிகழ்வுக்கு முன்னதாக அவரது தனியார் இல்லத்தில் வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்பட்டுள்ளன என்பதை வெளிப்படுத்துகின்றன. சதாசிவம் கிருஷ்ணகுமார் எனப்படும் “கிட்டு”, பாசிசப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுடன் இணைந்து செயல்பட்டு, 1983 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் இலங்கையில் ஏற்பட்ட இனக்கலவரத்திற்கு நேரடி தூண்டுகோலாக அமைந்த யாழ்ப்பாணம் திண்ணைவேலியில் நடைபெற்ற தாக்குதலின் பிரதான சூத்திரதாரர்களில் ஒருவராக இருந்தார் என்பதும், அந்தத் தாக்குதலில் இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த 13 வீரர்கள் உயிரிழந்தனர் என்பதும், ஒரு வரலாற்று உண்மையாகும்.

இச்சூழ்நிலையில், • PTA பிரிவு 14 இன் கீழ் தடை செய்யப்பட்ட (proscribed) பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த ஒருவரின் நினைவுகளைப் பொதுவெளியில் போற்றுதல், • PTA பிரிவு 15 இன் பொருள்படி, தடை செய்யப்பட்ட அமைப்பை ஆதரிக்கும், ஊக்குவிக்கும் அல்லது மகிமைப்படுத்தும் செயற்பாடுகள், • மேலும், PTA பிரிவு 2 இன் கீழ், தேசிய பாதுகாப்புக்கும் பொது ஒழுங்குக்கும் அச்சுறுத்தலாக அமையும் செயற்பாடுகள் என அனைத்தும், இலங்கையில் நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் தண்டனைக்குரிய குற்றச் செயல்களாக கருதப்படுகின்றன என்பதை இவ்விடத்தில் சட்டரீதியாகத் தெளிவாக சுட்டிக்காட்டுகின்றேன். மேலும், அதே நாளான 16.01.2026 அன்று, இலங்கை ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அவர்கள் யாழ்ப்பாணம் பலாலி பகுதியில் பொதுமக்களிடையே எந்தவிதக் கட்டுப்பாடுகளும் இன்றி காலை வேளையில் நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தமை அரசியல் மற்றும் பாதுகாப்பு ரீதியாக மிக முக்கியமான விடயமாகும்.

இத்தகைய சூழ்நிலையில், அதே நாளிலும் அதே மாவட்டத்தில், PTA யின் கீழ் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த ஒருவருக்கான நினைவேந்தல் நிகழ்வு நடைபெற அனுமதிக்கப்பட்டிருப்பது, சட்ட அமலாக்கத் துறைகளின் நம்பகத்தன்மை மற்றும் பாரபட்சமற்ற சட்ட அமலாக்கல் தொடர்பாக மிகக் கடுமையான சந்தேகங்களை உருவாக்கியுள்ளது. எனவே, மேலே குறிப்பிடப்பட்ட சட்ட விதிகளின் அடிப்படையில், குறித்த சம்பவம் தொடர்பாக பயங்கரவாத தடுப்பு பிரிவு உடனடியாகவும் முழுமையாகவும் விசாரணை மேற்கொண்டு, இந்த நினைவேந்தல் நிகழ்வின் திட்டமிடல், ஏற்பாடு, வசதி செய்தல், விளம்பரப்படுத்தல் மற்றும் செயல்படுத்தல் ஆகியவற்றில் நேரடியாகவோ மறைமுகமாகவோ ஈடுபட்ட அனைத்து நபர்கள் மற்றும் அமைப்புகளை அடையாளம் கண்டு, PTA பிரிவுகள் 2, 14 மற்றும் 15 உள்ளிட்ட நடைமுறைச் சட்டங்களின் கீழ் உரிய சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும், “இலங்கையில் சட்டம் அனைவருக்கும் சமம்” என்ற அடிப்படைக் கொள்கை எந்தவித விதிவிலக்கும் இன்றி அமல்படுத்தப்படுவதை உறுதிப்படுத்துமாறும் மரியாதையுடன் கேட்டுக்கொள்கிறேன். தேசிய பாதுகாப்பு, பொதுமக்கள் நம்பிக்கை மற்றும் சட்ட ஆட்சி ஆகியவற்றின் நலனுக்காக, இம்முறைப்பாடு தங்களின் அவசர கவனத்திற்கு உட்படுத்தப்படும் என நம்புகிறேன். இப்படிக்கு, தங்கள் உண்மையுள்ள அருண் சித்தார்த் மாவட்ட அமைப்பாளர்- யாழ்ப்பாணம். சர்வஜன அதிகாரம் – கட்சி +94774842464

WOULD YOU LIKE TO BECOME ONE OF OUR DONORS?

I am not here to repeat what is comfortable to hear. I am here to say what is deliberately unsaid.