பால்ராஜை பாராளுமன்றத்தில் நினைவுகூர்ந்த ரவிகரன் மீது நடவடிக்கை கோரி சபாநாயகரிடம் முறைப்பாடு

பால்ராஜை பாராளுமன்றத்தில் நினைவுகூர்ந்த ரவிகரன் மீது நடவடிக்கை கோரி சபாநாயகரிடம் முறைப்பாடு

0:00 / 0:00
HD
1 views

கடந்த 21/05/2026 அன்று நடைபெற்ற இலங்கைப் பாராளுமன்றக் கூட்டத்தொடரில், இலங்கை தமிழரசுக் கட்சியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்கள், இலங்கையில் தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த பால்ராஜ் என்பவரை நினைவுகூர்ந்து உரையாற்றியமைக்கு தாம் கடுமையான கண்டனத்தை வெளியிடுவதாகவும் ரவிகரன் மீது நடவடிக்கை எடுக்க கோரி சபாநாயகருக்கு முறைப்பாடொன்று அனுப்பி வைத்திருப்பதாகவும் யாழ் சிவில் சமூக நிலையத்தின் தலைவர் அருண் சித்தார்த் தெரிவித்துள்ளார்.
இன்று (26/05/2026) அவரது அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இக்கருத்துகளை வெளியிட்டார்.
குறித்த முறைப்பாட்டு கடிதம் முழுமையாக இங்கே பிரசுரிக்கப்படுகிறது.
கெளரவ சபாநாயகர் அவர்கள்,
இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் பாராளுமன்றம்,
ஸ்ரீ ஜயவர்த்தனபுர கோட்டை,
இலங்கை.
மூலம்:
யாழ் சிவில் சமூகம்
யாழ்ப்பாணம்.
திகதி: 25/05/2026
பொருள்: தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பின் உறுப்பினரைப் பாராளுமன்றத்தில் புகழ்ந்து உரையாற்றிய வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் திரு. துரைராசா ரவிகரன் தொடர்பான முறைப்பாடு

கெளரவ சபாநாயகர் அவர்களே,
இலங்கை தமிழரசுக் கட்சியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் திரு. துரைராசா ரவிகரன் அவர்கள், கடந்த 21/05/2026 ஆம் திகதி இலங்கைப் பாராளுமன்றத்தில் உரையாற்றிய போது, விடுதலைப் புலிகள் எனப்படும் தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பின் உறுப்பினரான பால்ராஜ் என்பவரை நினைவுகூர்ந்து புகழ்ந்து உரையாற்றியமை குறித்து எமது எதிர்ப்பையும் கண்டனத்தையும் பதிவு செய்கின்றோம்.
அவர் தனது உரையில் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தார்:
“எமது ஈழ விடுதலைப் போராட்டத்தில் சமர்களின் நாயகன் பிரிகேடியர் பால்ராஜ் அவர்கள் எம்மை விட்டுப் பிரிந்து 18 ஆண்டுகள் கடந்திருக்கின்றன. கந்தையா பாலசேகரம் என்ற இயற்பெயருடைய சமர்களின் நாயகன் பிரிகேடியர் பால்ராஜ் அவர்கள் முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத்தொடுவாய் பகுதியைச் சேர்ந்தவர். உலகப் போரியல் வல்லுநர்களே கண்டு வியந்த சமர்களின் நாயகன் பிரிகேடியர் பால்ராஜ் அவர்களுக்கு இந்த உயரிய சபையிலே சிரம் தாழ்த்தி எமது அஞ்சலிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.”
மேற்கண்ட உரை, இலங்கையின் சட்டவாக்கச் சபையான பாராளுமன்றத்தின் கண்ணியத்திற்கும், நாட்டில் அமலில் உள்ள பயங்கரவாதத் தடுப்பு மற்றும் குற்றத்தடுப்பு சட்டங்களுக்கும் முரணானதாக அமைந்துள்ளது என நாம் உங்களுக்குச் சுட்டிக் காட்டுகின்றோம்.
குறிப்பாக, “பிரிகேடியர் பால்ராஜ்” என அழைக்கப்படும் குறித்த நபர், எந்த சட்டரீதியான நாட்டின் படையில் “பிரிகேடியராக” இருந்தார் என நாம் கெளரவ பாராளுமன்ற உறுப்பினர் ரவிகரனிடம் கேள்வி எழுப்புகின்றோம்.

இந்த நபர் இலங்கையிலும் மேலும் பல சர்வதேச நாடுகளிலும் பயங்கரவாத அமைப்பாக தடை செய்யப்பட்ட அமைப்பில் அங்கம் வகித்த பயங்கரவாதி ஒருவராவார்.
இவர் சட்டரீதியான இலங்கை இராணுவத்துக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட பல தாக்குதல்களில் முன்னின்ற ஒரு பயங்கரவாதி எனப் பரவலாக அறியப்பட்டவர். அத்தோடு சமான்ய நிராயுதபாணிகளான இலங்கைக் குடிமக்களுக்கெதிரான குண்டுத் தாக்குதல்கள் மற்றும் படுகொலைகளிலும் பங்கெடுத்தல், திட்டம் தீட்டல், பயங்கரவாதிகளைப் பயிற்றுதல் போன்ற செயல்பாடுகளிலும் பங்கெடுத்தவர் என்பதும் இலங்கையில் வடபகுதியில் வாழும் மக்களுக்கிடையில் அறியப்பட்ட ஒரு விடயமாகும்.
குறிப்பாக, எமது தாய் நாடான இலங்கையின் ஆனையிறவு என்னும் இடத்தில் அமைந்திருந்த சட்டரீதியான எமது இராணுவத்தின் முகாம் மீது 2000 ஆம் ஆண்டு இவரும் இவரது பயங்கரவாத அமைப்பும் மேற்கொண்ட கோழைத்தனமான பதுங்கியிருந்து நடத்திய தாக்குதலில், 500 இற்கும் 1000 இற்கும் இடைப்பட்ட எண்ணிக்கையிலான இலங்கை இராணுவ வீரர்கள் உயிரிழந்ததோடு, பலர் கடுமையான காயங்களுக்கும் நிரந்தர அங்கவீனங்களுக்கும் உள்ளாகினர்.

நாட்டின் இறையாண்மை, ஒருமைப்பாடு மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பிற்காக உயிர்தியாகம் செய்த பாதுகாப்புப் படை வீரர்களை நினைவு கூருவதை விடுத்து இது போன்ற ஒரு பயங்கரவாதியை இலங்கைப் பாராளுமன்றம் போன்ற உயரிய சட்டவாக்கச் சபையில் புகழ்ந்து போற்றுவது இந்த நாட்டை நேசிக்கும் மக்கள் எவராலும் எற்றுக்கொள்ள முடியாத ஒரு விடயமாகும். இவ்வாறான பயங்கரவாதிகளைப் போற்றுவது இப்பயங்கரவாதிகளால் படுகொலை செய்யப்பட் மற்றும் நிரந்தரமாக அங்கவீனர்கள் ஆக்கப்பட்ட இந்த நாட்டின் சமான்ய பொதுமக்களை ஆத்திரமூட்டும் ஒரு செயலும் பாதிக்கப்பட்ட தரப்புகளின் காயங்களை மீண்டும் கிளரும் ஒரு செயலுமாகும்.
மேலும் கவலைக்குரிய விடயமாக, குறித்த உரை நிகழ்ந்தபோது எந்தவொரு ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களோ எதிர்க்கட்சி உறுப்பினர்களோ எதிர்ப்பு வெளியிடாததோடு, குறித்த உரையை Hansard பதிவிலிருந்து நீக்குமாறு கோராததும், அல்லது இவ்விடயத்தை சபாநாயகர் அவர்களின் கவனத்திற்கு உடனடியாக கொண்டுவராததும் அவதானிக்ககூடியதாக இருந்தது.
சட்டத்தால் தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகள் தொடர்பான நாட்டின் சட்ட மற்றும் அரசியல் நிலைப்பாட்டை பலவீனப்படுத்தக்கூடிய முன்னுதாரணமாக இந்த உறுப்பினரின் பேச்சு அமைகின்றது என்பதை நாம் உங்களுக்கு சுட்டிக்காட்டு்கின்றோம்.
எனவே, யாழ் சிவில் சமூக நிலையம் சார்பில், தங்களிடம் மரியாதையுடன் பின்வரும் நடவடிக்கைகளை கோருகின்றோம்:
1. 21/05/2026 அன்று திரு. துரைராசா ரவிகரன் அவர்கள் ஆற்றிய மேற்கண்ட உரையை Hansard பதிவிலிருந்து அகற்ற தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல்;
2. தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பின் உறுப்பினரைப் பாராளுமன்றத்தில் புகழ்ந்து உரையாற்றியமை தொடர்பாக குறித்த பாராளுமன்ற உறுப்பினருக்கு எதிராக உரிய ஒழுக்காற்று நடவடிக்கை எடுத்தல்;

3. எதிர்காலத்தில் இலங்கைப் பாராளுமன்றத்தில் பயங்கரவாதத்தை மகிமைப்படுத்தும், அல்லது நாட்டின் பாதுகாப்புப் படைகளின் தியாகத்தை அவமதிக்கும் வகையிலான உரைகள் இடம்பெறாதவாறு தெளிவான வழிகாட்டுதல்கள் மற்றும் நடைமுறைகளை உறுதிசெய்தல்.
தேசிய ஒற்றுமை, ஜனநாயக மரபுகள் மற்றும் உயிர்தியாகம் செய்த பாதுகாப்புப் படை வீரர்களின் நினைவுக்கு உரிய மரியாதையைப் பாதுகாக்கும் நோக்கில், இம்முறைப்பாட்டை தங்களது கவனத்திற்கு கொண்டு வருகின்றோம்.
நன்றி.

மரியாதையுடன்,
அருண் சித்தார்த் – தேசிய அமைப்பாளர்
யாழ் சிவில் சமூக நிலையம்
238, கே,கே, எஸ், வீதி, தாவடி
யாழ்ப்பாணம்
இலங்கை.
Tel +94774842464
Off +212213267
Mail -jaffnacivilsociety@gmail.com

WOULD YOU LIKE TO BECOME ONE OF OUR DONORS?

I am not here to repeat what is comfortable to hear. I am here to say what is deliberately unsaid.