புலிகளின் வன்முறை மற்றும் பாதிக்கப்பட்ட தாய்மார்களின் வலிய அனுபவங்கள்
இந்த தாயின் மூன்று பிள்ளைகள் பாசிசப் புலிகளால் 1990 ஆம் ஆண்டளவில் படுகொலை செய்யப்பட்டார்கள். இவர் போன்று பல்லாயிரக்கணக்கான தமிழ்த் தாய்மார்கள் புலிகளின் கொலைவெறிக்கும் பிரபாகரனின் தனிமனித பயங்கரவாதத்துக்கும் தமது பிள்ளைகளைப் பலி கொடுத்து விட்டு இன்று நடைபிணங்களாக வாழ்கின்றனர்.
மூன்று பிள்ளைகளைப் படுகொலை செய்தது மட்டுமில்லாமல் இவர்களுடைய வீடுகளில் இருந்த சொத்துபத்துகளையும் பறித்தெடுத்துவிட்டு இவர்கள் குடும்பம் குடும்பமாக இந்தியாவுக்கு புலிகளால் பலாத்காரமாக அனுப்பட்டனர்.
இந்த மாதிரியான நலிந்த மக்களின் குடும்பங்களை முழுமையாக சிதறடித்தவர்களில் சிலர் இன்றும் கூட அது குறித்து வருந்துவதாகத் தெரியவில்லை.
இது போன்ற எண்ணிலடங்காத படுகொலைகளால் புலிகள் அடைந்த இலக்கு என்ன? இந்தப் படுகொலைகள் ஊடாக புலிகள் தமிழீழம் என்னும் “உத்தோப்பிய” நாட்டை அடைந்தார்களா? இன்று தமிழர் சமூகத்தில் மிக மிக நலிந்த நிலையில் வாழ்பவர்கள் யாரெனப் பார்த்தால் அவர்கள் ஏதோ ஒரு வகையில் புலிகளால் பாதிக்கப்பட்டவர்களாகவே இருக்கின்றார்கள்.
இந்த தாய் போன்று பல்லாயிரக்கணக்கான தாய்மார்களின் பிள்ளைகளை கொல்வதற்கான அதிகாரத்தை புலிகளுக்கு யார் கொடுத்தார்கள்? தமிழ் மக்கள் அந்த அதிகாரத்தை வழங்கினார்களா? புலிகள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டார்களா? புலிகளை மக்கள் ஆதரித்திருந்தால் புலிகள் ஏன் பல சிறுவர் சிறுமியரை வலுகட்டாயமாக பிடித்து தமது படையணிகளில் சேர்த்தார்கள்? புலிகளின் கட்டுப்பாட்டு பகுதிகளில் இருந்து மக்கள் வெளியேறுவதற்கு ஏன் தடை செய்தார்கள்?
இன்று முன்னாள் புலிகள் எனப்பிரபலமாக தம்மை முன்னிறுத்தி தேர்தல்களில் போட்டியிட்ட எவரையும் தமிழ் மக்கள் வெற்றிபெறச் செய்யவில்லை ஏன்? முன்னாள் புலிகளை தமிழ் மக்கள் தங்கள் பிரதிநிதிகளாக பாராளுமன்றில் அல்ல ஒரு உள்ளூராட்சி மன்றத்தில் கூட தெரிவு செய்யவில்லை, ஏன்?
ஏனெனில் புலிகளை மக்கள் தன்னெழுச்சியாக ஆதரிக்கவில்லை. புலிகளினால் அச்சுறுத்தப்பட்டு, மரணபீதிக்குள் மக்கள் வைத்திருக்கப்பட்டார்கள். புலிகளால் பணம் உழைத்த, இன்றும் பணம் உழைக்கும் கூட்டம் ஒன்றே புலிகளை அன்றும் ஆதரித்தது. இன்றும் ஆதரிக்கின்றது.
புலிகள் மீள வருவதை நீங்கள் விரும்புகின்றீர்களா என இலங்கையில் வாழும் தமிழ் மக்களை கேட்டால் 90 சதவீதமானவர்கள் இல்லையென்றே பதிலளிப்பார்கள்.
இந்தத்தாய் போன்ற பல்லாயிரக்கணக்கான தாய்மார்களின் கண்ணீர்தான் பிரபாகரனும் அவன் குடும்பமும் நந்திக்கடல் கரையில் கோரமாக இறந்து போக காரணமாகியது என்றால் அது மிகையில்லை.
அருண் சித்தார்த் யாழ்ப்பாணம் 10/04/2026 +94774842464