‘கிட்டு’வை நினைவுகூர்ந்தவர்கள் ஏன் இன்னும் கைது செய்யப்படவில்லை?

‘கிட்டு’வை நினைவுகூர்ந்தவர்கள் ஏன் இன்னும் கைது செய்யப்படவில்லை?

0:00 / 0:00
HD
1 views
சர்வஜன அதிகாரம் – யாழ்ப்பாண மாவட்டம்
புலிகளை ஊக்குவிக்கும் செயற்பாடுகளுக்கு ஒருபோதும் இடமளிக்க மாட்டோம் எனப் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால பாராளுமன்றத்தில் கூறியிருந்த போதும், “கிட்டு” எனப்படும் புலிப் பயங்கரவாதியை யாழ்ப்பாணத்தில் பகிரங்கமாக நினைவுகூர்ந்தவர்கள் மீது இன்னமும் நடவடிக்கை எடுக்காமல் இருப்பது ஏன் என அருண் சித்தார்த் கேள்வி எழுப்பியுள்ளார்.
சர்வஜன அதிகாரம் கட்சியின் யாழ்ப்பாண மாவட்ட அமைப்பாளரும் பிரபல அரசியல் செயல்பாட்டாளருமான அருண் சித்தார்த், இன்று தனது அலுவலகத்தில் நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே இவ்வாறு கேள்வி எழுப்பினார்.
மேலும் அங்கு அவர் கருத்துத் தெரிவிக்கையில் கூறியதாவது:
“கடந்த ஜனவரி மாதம் 16 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் உள்ள சங்கிலியன் பூங்காவில், சதாசிவம் கிருஷ்ணகுமார் என்ற இயற்பெயர் கொண்ட, புலிகளின் உறுப்பினரான ‘கிட்டு’ என அழைக்கப்படும் பயங்கரவாதியை, போராளிகளின் நலன்புரிச் சங்கம் எனப்படும் அமைப்பு ஒன்று பகிரங்கமாக நினைவுகூர்ந்து, போற்றிப் புகழும் நிகழ்வொன்றை நடத்தியுள்ளது.
தடைசெய்யப்பட்ட புலிப் பயங்கரவாத அமைப்பின் உறுப்பினரான இந்த ‘கிட்டு’ என்பவரைப் பொதுவெளியில் போற்றிப் புகழ்ந்து கொண்டாடியவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கக் கோரி, நாங்கள் 29.01.2026 அன்று யாழ்ப்பாணத்தில் உள்ள பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரிடம் முறைப்பாடொன்றை அளித்திருந்தோம். ஆயினும், இதுவரை அதற்கெதிராக எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
புலிப் பயங்கரவாதிகளால் படுகொலை செய்யப்பட்ட மக்களுக்காக நலன்புரிச் சங்கம் ஒன்றில்லை. ஆனால், சாமானிய மக்களைப் படுகொலை செய்த பயங்கரவாதிகளின் நலன்களுக்காக நலன்புரிச் சங்கம் ஒன்று எவ்வாறு இயங்க முடியும்?
இந்தச் சங்கத்தின் தலைவராக பிராங்க் டக்ளஸ் பிரபாகரன் (Frank Douglas Pirabakaran) என்பவர் செயற்படுவதாகவும், ஒருங்கிணைப்பாளராக செல்வநாயகம் அரவிந்தன் என்பவர் செயற்படுவதாகவும் அறிய முடிகிறது. இந்த அரவிந்தன் என்பவர்தான் அண்மையில் கிளிநொச்சியில் ஒரு பாடகர் கைது செய்யப்பட்டபோது நடைபெற்ற ஆர்ப்பாட்டம் ஒன்றில், ‘தமிழீழம் என்பது எங்கள் தாய்நிலம்’ என்றும், ‘பிரபாகரன்’, ‘தமிழீழம்’ போன்ற சொற்கள் தடைசெய்யப்பட்ட சொற்கள் அல்ல என்றும் சிங்கள மொழியில் கருத்து வெளியிட்டவர். இவர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டவரும் ஆவார்.
பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் மிகவும் தெளிவாக, தடைசெய்யப்பட்ட அமைப்பொன்றின் உறுப்பினர்களைப் பொதுவெளியில் போற்றிப் புகழ்வதோ அல்லது அந்த அமைப்பை மீளுருவாக்க முயல்வதோ குற்றம் எனக் குறிப்பிடுகிறது. சட்டம் இவ்வாறு இருக்கும்போது, இந்த நபர் ஏதோ சட்டத்தரணி போன்று புதிய சட்ட விளக்கங்களை வழங்க முயல்கிறார்.
கிளிநொச்சியில் புலிகளைப் போற்றிப் புகழ்ந்து பாடிய இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார். அந்த இளைஞனைப் போன்ற பலர் இன்று பிழைப்புக்காக புலிப்பாடல்கள் பாடுகின்றனர். இவர்கள் மீது பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் பாயுமானால், ‘கிட்டு’வை நினைவுகூர்ந்தவர்கள் ஏன் இன்னமும் கைது செய்யப்படவில்லை என நாம் கேள்வி எழுப்புகின்றோம்.
பாடல் பாடியவருக்கு ஒரு சட்டமும், பயங்கரவாதியை பகிரங்கமாக நினைவுகூர்ந்தவருக்கு ஒரு சட்டமும் இருக்க முடியாது. சட்டம் அனைவருக்கும் சமம் என்ற இந்த அரசாங்கத்தின் கொள்கை உண்மையெனில், ‘கிட்டு’ என்னும் பயங்கரவாதியை யாழ்ப்பாணத்தில் பகிரங்கமாகக் கொண்டாடியவர்கள் கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும்.
எமது வீடுகளில் எமது அன்புக்குரியவர்களைப் படுகொலை செய்த கொலைகாரர்களை எமது கண்முன்னால் மாவீரர்களாகக் கொண்டாட நாம் அனுமதிக்க முடியாது” என்றார்.
அருண் சித்தார்த் மாவட்ட அமைப்பாளர் சர்வஜன அதிகாரம் – யாழ்ப்பாணம்
தொலைபேசி: +94 77 484 2464

WOULD YOU LIKE TO BECOME ONE OF OUR DONORS?

I am not here to repeat what is comfortable to hear. I am here to say what is deliberately unsaid.