யாழ் பல்கலைக்கழக வெசாக் அலங்கார சேதம்: சந்தேகநபர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும்

யாழ் பல்கலைக்கழக வெசாக் அலங்கார சேதம்: சந்தேகநபர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும்

0:00 / 0:00
HD
2 views

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவ பீட வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த வெசாக் அலங்காரக் கூடுகளைச் சேதப்படுத்திய இரு நபர்கள், தங்களது முகங்களைத் துணியால் மூடியபடி கடந்த 31 ஆம் திகதி பல்கலைக்கழக வளாகத்திற்குள் நுழைந்து, இரவு சுமார் 10.50 மணியளவிலும் பின்னர் 12.50 மணியளவிலும் குறித்த அலங்காரக் கூடுகளைத் தாக்கி சேதப்படுத்தியதை பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் அவதானித்துள்ளதாக முகாமைத்துவ பீடாதிபதி வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக பத்திரிகைச் செய்திகள் இன்று வெளியாகியுள்ளன.
இந்தத் தகவல்களையும் வாக்குமூலங்களையும் முறைப்பாட்டையும் அடிப்படையாகக் கொண்டு, குறித்த இரு நபர்களையும் பொலிஸார் உடனடியாகக் கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சர்வஜன அதிகாரம் கட்சியின் யாழ்ப்பாண மாவட்ட அமைப்பாளர் அருண் சித்தார்த் தெரிவித்தார்.
மேலும், சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்படுவதன் மூலம், இச்சம்பவம் தொடர்பாக நாடளாவிய ரீதியில் பரவி வரும் பல்வேறு ஊகங்கள் மற்றும் தேவையற்ற சந்தேகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இன்று (03.06.2026) சர்வஜன அதிகாரம் கட்சியின் யாழ்ப்பாண அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகச் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் மேற்கண்ட கருத்துக்களை வெளியிட்டார்.

அத்துடன், இந்தச் சம்பவம் தொடர்பாக ஊடக அறிக்கையொன்றையும் அவர் ஊடகங்களுக்கு வெளியிட்டார்.
அந்த ஊடக அறிக்கை முழுமையாக கீழே தரப்படுகிறது.
ஊடக அறிக்கை
சர்வஜன அதிகாரம் – யாழ்ப்பாணம்
03.06.2026

யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்தில் அண்மையில் நடைபெற்ற வெசாக் நிகழ்வை முன்னின்று ஒழுங்கமைத்தவர்கள் அல்லது ஏற்பாடு செய்தவர்கள் முகாமைத்துவ பீடத்தின் சிங்கள பெளத்த மாணவர்களே எனவும், அதற்கான அனுமதியை பல்கலைக்கழக நடைமுறைகளுக்கு அமைவாக முகாமைத்துவ பீட மாணவர் ஒன்றியம் என்ற அடிப்படையில் தாங்கள் பெற்றுக்கொடுத்ததாகவும் முகாமைத்துவ பீட மாணவர் ஒன்றியத்தின் தலைவர் சந்திரகுமார் செந்தூரன் தெரிவித்தார்.
வெசாக் அலங்காரக்கூடுகள் சேதப்படுத்தப்பட்டமை தொடர்பாக மாணவர் ஒன்றியத் தலைவரைத் நான் தொடர்பு கொண்டு பேசும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
மேலும், சிங்கள மாணவர்கள் முன்னின்று நடத்திய இந்நிகழ்வில் தமிழ் மாணவர்களும் ஆர்வத்துடன் பங்கேற்று பல்வேறு உதவிகளை வழங்கியதோடு, வெசாக் தன்சலவிலும் இணைந்து செயல்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
“எமக்கிடையில் எந்தவிதமான இன மத பேதங்களும் இல்லை. பல்கலைக்கழக வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த வெசாக் அலங்காரக் கூடுகள் சேதப்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பான இடம்பெற்று வரும் விசாரணைகளுக்கு மாணவர் ஒன்றியமும் பல்கலைக்கழக நிர்வாகமும் முழுமையான ஒத்துழைப்பை வழங்கியுள்ளன,” என செந்தூரன் மேலும் கூறினார்.

இதேவேளை, முகாமைத்துவ பீடத்தைச் சேர்ந்த சிங்கள மாணவர் ஒருவர் கருத்துத் தெரிவிக்கையில், “இந்த நிகழ்வை முகாமைத்துவ பீடத்தின் நான்காம் ஆண்டு சிரேஷ்ட சிங்கள பெளத்த மாணவர்களே ஏற்பாடு செய்தனர். மாணவர் ஒன்றியத் தலைவர் என்ற அடிப்படையில் நிகழ்வுக்கான அனுமதியை அவர் பெற்றுத் தந்தார். வெசாக் நிகழ்வை சிரேஷ்ட சிங்கள மாணவர்கள் ஒழுங்கமைத்திருந்த போதிலும், தமிழ் மாணவ நண்பர்களும் எம்முடன் இணைந்து இந்நிகழ்வு வெற்றிகரமாக நடைபெறுவதற்கு பங்களிப்பை வழங்கினர்” என்றார்.
இதேவேளை முகாமைத்துவ பீட மாணவர் ஒன்றியம் நேற்று 02/06/2026 விடுத்துள்ள அறிக்கையில்: “It has come to our attention that concerns have arisen regarding the recent Vesak celebration event organised by Sinhala students within our faculty” என்று தெளிவாக குறிப்பிட்டுள்ளனர்.
அதாவது வெசாக் அலங்கார கூடுகளை காட்சிப்படுத்தல் விழா முகாமைத்துவ பீடத்தில் கற்கும் சிங்கள மாணவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டது என்று குறிப்பிட்டுள்ளனரே தவிர தன்னை ஒரு ஊடகவியலாளராக காட்டிக்கொள்ளும் Tharindu Uduwegetara மற்றும் அவரது குழுவினர் எழுதியுள்ளது போல மாணவர் ஒன்றியமோ, தமிழ் மாணவர்களோ இந்த நிகழ்வை ஏற்பாடு செய்ததாக தெரிவிக்கவில்லை.

தாம் அனுமதி பெற்றுக்கொடுத்து தமது பங்களிப்போ வழங்கியதாகவே அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
மாணவர் ஒன்றியமோ அல்லது தமிழ் மாணவர்களோ இந்த நிகழ்வை தாமாகவே ஏற்பாடு செய்திருந்தால் அது வரவேற்கத்தக்க விடயமே. ஆனால் அவ்வாறு இல்லாத போதும் இது தமிழ் மாணவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டது என்ற பொய்யை Tarindu udewegetara மற்றும் அவரது குழுவினர் சமூகமயப்படுத்த முயற்சித்ததன் ஊடாக அடைய விரும்பியது என்ன? ( இவர்களது நேற்றய பொய்யைப் பரப்பும் பதிவுகள் கீழே தரப்பட்டுள்ளன)
இதேவேளை, இந்த வெசாக் நிகழ்வில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த அலங்காரக் கூடுகள் சேதப்படுத்தப்பட்டமை தொடர்பான கண்டனத்தையும் செய்திகளையும் முதன்முதலில் வெளியிட்ட சர்வஜன அதிகாரம் கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளரான என்னை இனவாதியாகச் சித்தரித்து, Tharindu Uduwegetera என்பவர் whatsnews.lk என்னும் இணைய செய்தி தளத்தில் எழுதியுள்ள நீண்ட கட்டுரை எனது அவதானத்திற்கு வந்துள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பாக நான் முதலில் வெளியிட்ட அறிக்கை மிகவும் நிதானமாகவும், பொறுப்புணர்வுடனும், ஒவ்வொரு சொல்லையும் கவனமாகத் தேர்ந்தெடுத்தும் எழுதப்பட்டதாகும். அதில் எங்கும் இவர் எழுதியுள்ளது போல் இனவாத கருத்துகளை நான் வெளிப்படுத்தவில்லை. நான் எந்தக் கட்சியில் இருந்தாலும் இந்த நாட்டில் இனங்களுக்கிடையில் ஒற்றுமையை பேணிக் காக்க எனது அரசியல் வாழ்க்கை பூராகவும் நான் கொண்ட அர்ப்பணிப்பை இந்தநாட்டு மக்கள் நன்றாகவே அறிவர்.
2009 ஆம் ஆண்டு இறுதி யுத்தக் காலத்தில் இலட்சக்கணக்கான தமிழ் மக்கள் புலிகளால் யுத்த வலயங்களுக்குள் பணயக்கைதிகளாகத் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். அங்கிருந்து தப்பித்து இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிகளை நோக்கிச் சென்ற பொதுமக்கள் மீது புலிகள் துப்பாக்கிச் சூடு நடத்தி அவர்களைப் படுகொலை செய்தனர். பல்லாயிரம் பேர் இவ்வாறு புலிகளால் சுடப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர். இவ்வாறு தாம் கட்டுப்பாட்டில் வைத்திருந்த இலட்சக்கணக்கான தமிழ் மக்களை தமக்கான மனித அரணாகப் புலிகள் பயன்படுத்தினர். புலிகளாலேயே தமிழ் மக்கள் இனவழிப்பு செய்யப்பட்டனர்.
தமிழ் மக்கள் மீது இந்த மனிதாபிமானமற்ற செயற்பாடுகள் இடம்பெற்றுக் கொண்டிருந்த அந்தக் காலகட்டத்தில், புலிகளால் பணயக்கைதிகளாக பிடித்து வைத்திருக்கப்பட்ட அந்த மக்களை விடுவிக்குமாறு கோரி ஒரு சொல் கூடப் பேசாத, ஒரு அறிக்கை கூட வெளியிடாத, ஒரு ஆர்ப்பாட்டம் கூட நடத்தாத, ஒரு பதாகை கூட ஏந்தாத Tharindu Uduwegetara காலிமுகத் திடலில் புலிப் பயங்கரவாதியான இசைப்பிரியா என்பவருக்கு நீதி வேண்டி பதாகை ஏந்தி நின்றார்.
இசைப்பிரியா என்னும் புலிப் பயங்கரவாதியின் புகைப்படத்தை தாங்கிய பதாகையை ஏந்தி பொதுவெளியில் நின்ற Tharindu Uduwegetara விடம் இசைப்பிரியாவின் புலிப் பயங்கரவாத அமைப்பு கடத்திக் காணாமலாக்கி சித்திரவதை செய்து படுகொலை செய்த என் வீட்டு உறவுகளுக்கு என்ன பதில் சொல்லப் போகின்றார் என நான் கேள்வி எழுப்புகின்றேன்.

அதே போல ஆயிரக்கணக்கான அப்பாவி பொதுமக்கள், பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் மற்றும் சிறார்கள் இசைப்பிரியா அங்கம் வகித்த புலிப் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டபோது Tarindu uduwegetera ஏன் இதே உறுதியுடன் குரல் கொடுக்கவில்லை என்றும் நான் கேள்வி எழுப்புகின்றேன்.
யாழ்ப்பாணத்தில் பிறந்து வளர்ந்து, யுத்தத்தின் தாக்கங்களை நேரடியாக அனுபவித்து, இந்தக் கொடிய இனவாத யுத்தத்தினால் என்னை வளர்த்த என் உற்றார் உறவினர்களை இழந்து, இன்றும் எனது குடும்பத்தில் புலிகளின் பயங்கரவாத தாக்குதல்களால் நிரந்தர அங்கவீனமானவர்களைப் பாராமரித்துச் சுமந்து கொண்டு, இந்தச் சமூகத்தின் மத்தியிலேயே இன்றும் வாழ்ந்து வரும் நான் கூறுவது உண்மையா, அல்லது ஊடகவியலாளர் என்ற அடையாளத்தின் பின்னால் இருந்து புலிகளின் டயஸ்போரா வலையமைப்புகளின் நிதி மற்றும் அரசியல் நிகழ்ச்சி நிரல்களுக்காக செயற்படுபவர்கள் கூறுவது உண்மையா என்பதைத் தீர்மானிக்கும் உரிமையை இந்த நாட்டின் புத்தியுள்ள மக்களிடமே நான் விட்டுவிடுகின்றேன்.

இறுதியாக, தென்னிலங்கையில் உள்ள சிங்கள மக்களின் கவனத்துக்கு ஒரு நுட்பமான விடயத்தைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
புலிப் (LTTE) பயங்கரவாதத்திற்கு எதிராகப் பேசுபவர்களை, தமிழ் சமூகத்திற்கு எதிராகப் பேசுபவர்களாகச் சித்தரிக்க அல்லது அவர்களை இனவாதிகள் என முத்திரை குத்த திட்டமிட்ட முயற்சி ஒன்று அண்மைக்காலமாக தென்னிலங்கையில் மேற்கொள்ளப்பட்டு வருவதைக் காணக்கூடியதாக இருக்கின்றது.
இது புலிப் பயங்கரவாதிகளால் பல ஆண்டுகளாக ஒரு பிரச்சார உத்தியாக பாவிக்கப்பட்டு வந்த ஒரு வியூகம் ஆகும்.
தற்போது தங்களை ஊடகவியலாளர்கள் என்று கூறிக்கொண்டு, இந்த உத்தியைக் கையாண்டு வரும் தென்னிலங்கையிலுள்ள புலிப் பயங்கரவாதத்தின் முகவர்களுக்கு நான் கூற விரும்புவது என்னவென்றால், இது புலிப் பயங்கரவாத்த்தின் பழைய மற்றும் தோல்வியடைந்த ஒரு பிரச்சார உத்தியாகும்.
புலிப் பயங்கரவாதிகளும் தமிழ் மக்களும் ஒன்றல்ல. புலிகள் என்பது ஒரு பயங்கரவாத அமைப்பாகும்.
தமிழ் மக்களும் புலிப் பயங்கரவாதிகளும் இரு வேறுபட்ட தரப்பினர்.
இந்த நாட்டை நேசிக்கும் தமிழ் மக்கள் பயங்கரவாதத்தை நிராகரிப்பதுடன் அதனை எதிர்க்கவும் செய்கிறார்கள்.
நண்பர்களே, இந்த வேறுபாட்டைப் புரிந்து கொள்வது அவசியமானதாகும்.

அருண் சித்தார்த்
மாவட்ட அமைப்பாளர் – யாழ்ப்பாணம்
சர்வஜன அதிகாரம் கட்சி
03/06/2026
Contact : +94774842464
kmarxedu@gmail.com

WOULD YOU LIKE TO BECOME ONE OF OUR DONORS?

I am not here to repeat what is comfortable to hear. I am here to say what is deliberately unsaid.