நண்பர் உமாகரன் தொலைபேசியில் அழைத்து…..
நண்பர் உமாகரன் தொலைபேசியில் அழைத்து, “இந்தப் பாடகரின் கைதுக்குப் பின்னால் நீங்கள் இருக்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன்” என்றார். அதற்கு நான், “நிச்சயமாக நான் இல்லை” என்று பதிலளித்தேன்.
என்னைத் தொடர்ச்சியாக அவதானித்து வருபவர்கள், நான் ஒருபோதும் யாரையும் பின்னால் இருந்து குத்த மாட்டேன் என்பதை நன்கு அறிந்திருப்பார்கள்.
TubeTamil டிவினியாவின் கைதுக்குப் பின்னாலும் பலர் என்னைக் குற்றம்சாட்டினர். ஆனால் டிவினியா சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட பின்னர் என்னுடன் உரையாடியபோது, “அண்ணா, எங்கள் கைதுக்குப் பின்னால் நீங்கள் இல்லை என்பது எங்களுக்குத் தெரியும்” என்று நேரடியாகத் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்டவரே என்னால் தான் பாதிக்கப்படவில்லை என்று கூறிய பின்னர், அதற்கு மேலாக நான் விளக்கமளிக்க வேண்டிய அவசியம் இல்லை.
அதேபோன்று, இந்தக் கைதுக்கும் எனக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை.
நான் கருத்தியல் ரீதியாக புலிகளைப் போற்றிப் புகழும் எந்த ஆக்கத்தையும் எதிர்க்கிறேன். ஆனால் அந்த ஆக்கங்களை உருவாக்கியவர்களை, குறிப்பாக பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைப்பதற்கு எனக்கு உடன்பாடு இல்லை.
பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்கப்பட வேண்டுமா என்று கேட்டால், அதில் மனித உரிமைகளை மீறும் பல சரத்துகள் திருத்தப்பட வேண்டியது அவசியம் என்பதே எனது நிலைப்பாடு. அதேவேளை, புலிக்கூச்சல்கள் முழுமையாக அடங்கும் வரை அந்தச் சட்டம் ஒட்டுமொத்தமாக நீக்கப்பட வேண்டும் என்ற கருத்துடன் நான் முழுமையாக இணங்கவில்லை.
அதில் எனக்கு பல மாற்றுக் கருத்துகள் உள்ளன.
இலங்கையின் சிறைச்சாலைகள் கைதிகளைத் தடுத்து வைப்பதற்கான சர்வதேச தரநிலைகளுக்கு ஏற்ப அமைந்தவை அல்ல. அவை பல்வேறு துஷ்பிரயோகங்கள் நிகழும் இடங்களாக இருப்பதை மறுக்க முடியாது.
ஆனால் புலிகளின் சிறைச்சாலைகள் இதைவிட நூறு மடங்கு கொடூரமானவையாக இருந்தன. மனிதகுலமே வெட்கப்படக்கூடிய அளவிற்கு சித்திரவதைகளும் மனிதாபிமானமற்ற நடத்தைகளும் அங்கு இடம்பெற்றன.
அதேபோன்று, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் பல பிரிவுகள் கடுமையான விமர்சனத்திற்குரியவை.
ஆனால் புலிகளின் சட்டங்களும் நடைமுறைகளும் இதைவிடக் கொடூரமான வகையில், தமக்கு எதிரான கலைஞர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள் மற்றும் சிந்தனையாளர்களைத் தண்டித்தன என்பதையும் புலி அனுதாபிகளுக்கு நினைவூட்ட விரும்புகிறேன்.
கவிஞர் செல்வி, ஒரு கவிதை எழுதியதற்காக புலிகளால் சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டார்.
ஆனால் கிளிநொச்சியில் கைது செய்யப்பட்ட இந்த இளைஞன், தனது பாடலுக்காக சித்திரவதை செய்யப்படவுமில்லை; கொல்லப்படவுமில்லை என்பதையும் புலி ஆதரவாளர்கள் நினைவில் கொள்ள வேண்டும்.
எங்கள் (இலங்கை) அரசாங்கத்துக்கும் உங்கள் (புலி) அரசாங்கத்துக்குமான அடிப்படை வித்தியாசம் இதுவே.
தங்களுக்கு எதிரானவர்களை அரசுகளும் தண்டித்துள்ளன. அரசுகளிடமிருந்து மக்களுக்கு விடுதலை பெற்றுத் தருவதாகக் கூறிய புலிகளும் தண்டித்துள்ளனர்.
ஆனால் இந்த இரண்டிற்கும் இடையில், மிகக் கொடூரமான இரத்தக் காட்டேரியாக நான் புலிகளையே கருதுகிறேன்.
அரசுகளுடன் போராடலாம்; வாதிடலாம்; எதிர்க்கலாம். ஆனால் புலிகளுடன் நீங்கள் கருத்து வேறுபாடு கொண்டாலே மரணமே தண்டனையாக மாறியிருந்தது.
கவிஞர் செல்வி, ஒரு கவிதை எழுதியதற்காக புலிகளால் கடத்தப்பட்ட காலத்தில், இன்று கிளிநொச்சி பாடகருக்காக நடைபெறுவது போன்ற ஒரு ஆர்ப்பாட்டத்தை புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் நடத்துவது சாத்தியமாக இருந்திருக்குமா?
பயங்கரவாதம் என்பதன் அடிப்படை வரைவிலக்கணமே, தமது அரசியல் இலக்குகளுக்கு எதிரான கருத்துக்களை வெளிப்படுத்துபவர்களைக் கொல்வதன் மூலமாக சமூகத்தை அச்சத்தில் உறையவைத்து, அந்த அச்சத்தை அரசியல் கருவியாகப் பயன்படுத்தி தமது நோக்கங்களை அடைவதாகும்.
அத்தகைய அரசியல் கலாசாரம் ஒரு ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்காது. மாறாக, அது சுயமாக சிந்திக்கத் தயங்கும், அச்சத்தால் மௌனமாக்கப்பட்ட மக்களையும், விமர்சனச் சிந்தனையற்ற கூட்டங்களையும் மட்டுமே உருவாக்கும். இன்று நாம் காணும் பல சமூகப் பிரச்சினைகளின் வேரும் அத்தகைய பயங்கரவாத அரசியல் மரபுகளிலேயே இருக்கிறது.