யாழ் பல்கலைக்கழக தேசியக் கொடி விவகாரம் குறித்து சர்வஜன அதிகாரம் கட்சியின் கருத்து மற்றும் மாணவர் செயற்பாடுகள் மீதான விமர்சனம்
ஊடக அறிக்கை
சர்வஜன அதிகாரம்
யாழ் மாவட்டம்
23/03/2026
யாழ் பல்கலைக்கழகத்தில் கடந்த பெப்ரவரி மாதம் 4 ஆம் திகதி இலங்கையின் சுதந்திர தினத்தன்று தேசிய கொடியை கீழிறக்கி அவமரியாதை செய்த மாணவர்கள் தொடர்பாக இடம்பெற்று வரும் விசாரணைகளை நாம் ஆதரிக்கும் அதேவேளை, யாழ் பல்கலைக்கழகம் சிங்களமயமாக்கப்படுவதாக பல்கலைக்கழக மாணவர்கள் சிலர் நடத்திய எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் வெளியிட்ட கருத்தை கண்டிப்பதாக அருண் சித்தார்த் தெரிவித்தார்.
சர்வஜன அதிகாரம் கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளரும் பிரபல சமூக செயற்பாட்டாளருமான அருண் சித்தார்த் இன்று அவரது அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே மேற்கண்ட கருத்துகளை தெரிவித்தார்.
அங்கு மேலும் கருத்து தெரிவிக்கையில்;
தேசிய கொடியை அவமதித்த குற்றச்சாட்டில் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் சிலருக்கு எதிராக இடம்பெற்று வரும் விசாரணைகளை நாம் வரவேற்கிறோம். ஒரு நாட்டின் தேசிய கொடி, தேசிய கீதம் போன்றவை அந்நாட்டின் மாண்புடன் சம்பந்தப்பட்ட விடயங்களாகும்.
அரசியலமைப்பில் வழங்கப்பட்டுள்ள எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடும் மாணவர்களின் சுதந்திரத்தை நாம் மதிக்கும் அவ்வேளையில், தேசிய கொடியை கீழிறக்கி வீசி எறிந்து விட்டு அவ்விடத்தில் கறுப்பு கொடி ஏற்றியதை அனுமதிக்க முடியாது.
தடைகள் தான் ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்குகின்றன. அத்தடைகளை மீறுவதையே குற்றம் என கருதப்படுகிறது. அக்குற்றத்தை தண்டிக்கும் அதிகாரத்தையே அரசு என்கிறோம். ஆகவே, இந்த விடயத்தில் அரசு முன்னெடுக்கும் விசாரணைகள் அவசியமானவை என நாம் கருதுகின்றோம்.
அதேவேளை, இந்த விசாரணைகளுக்கு எதிராக மாணவர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் மாணவர் தலைவர் ஒருவர் கருத்து கூறும் போது, யாழ் பல்கலைக்கழகத்தில் பல பாடவிதானங்கள் ஆங்கிலத்தில் கற்பிக்கப்பட்டு அங்கு சிங்கள மாணவர்களும் உள்வாங்கப்பட்டு யாழ் பல்கலைக்கழகம் சிங்களமயமாக்கப்படுவதாக குற்றஞ்சாட்டும் கருத்தொன்றை முன்வைத்திருந்தார்.
இந்தக் கருத்து மிகுந்த இனவாதமான, பத்தாஞ்சலித்தனமான, கருத்தாகும்.
பல்கலைக்கழக அனுமதிகள் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவால் மாணவர்கள் உயர்தரத்தில் எடுத்த பெறுபேறுகளுக்கமைய Z வெட்டுப்புள்ளிகளின் அடிப்படையிலேயே வழங்கப்படுகின்றமை இந்த நாட்டில் கற்றவர் சமூகத்தினர் அறிந்த ஒரு விடயமாகும்.
அதி கூடிய பெறுபேறுகள், மாவட்ட கோட்டா முறைமை, மாணவர்களின் விண்ணப்பங்களில் அவர்கள் கோரிக்கை விடுக்கும் பல்கலைக்கழகங்கள் மற்றும் அங்கு அனுமதிக்கப்பட்டுள்ள எண்ணிக்கை என்பவற்றின் அடிப்படையில் இடம்பெறுகிறது. இதில் அரசு தலையீடு செய்ய முடியாது.
பல்கலைக்கழக அனுமதி இவ்வாறு இருக்கையில், யாழ் பல்கலைக்கழகத்தில் சிங்கள மாணவர்கள் கல்வி கற்பது எவ்வாறு சிங்களமயமாக்கல் என கூற முடியும்.
இலங்கையில் தென்னிலங்கையில் உள்ள களனி, வயம்ப, ருகுணு, ஊவா வெல்லஸ்ஸ, ரஜரட்ட, சப்ரகமுவ போன்ற பல்கலைக்கழகங்களில் எல்லாம் தமிழ் மாணவர்கள் கல்வி கற்கின்றார்கள். அங்குள்ள சிங்கள மாணவர்களோ அல்லது மாணவர் சங்கங்களோ ஒருநாளும் அந்தப் பல்கலைக்கழகங்களில் தமிழ் மாணவர்கள் கல்வி கற்பதற்கு தமது அதிருப்திகளை வெளியிட்டதில்லை.
ஆனால் யாழ் பல்கலைக்கழகத்தில் தான் இந்த மாதிரியான இனவாத கருத்துகள் வெளியிடப்படுகின்றன.
யாழ் பல்கலைக்கழகம் என்பது தமிழர் மரபுரிமைச் சின்னம் என அந்த மாணவர் தலைவர் கூறுகின்றார். அதுவும் மிகத் தவறான கருத்தாகும்.
யாழ் பல்கலைகழகம் மட்டுமல்ல, இந்த நாட்டில் உள்ள அனைத்து அரச பல்கலைக்கழகங்களும் இந்த நாட்டின் குடிமகன்கள் அனைவருக்கும் பொதுவானது. சகல இன மக்களினதும் வரிப்பணத்தில் இயங்கும் அரச நிறுவனங்கள் இவை.
சுவஸ்திகா அருளிங்கம் என்கின்ற பெண் சட்டத்தரணி ஒருவர் புலிகளைப் பாசிசவாதிகள் எனக் கூறினார் எனச் சொல்லி, இதைப் போலவே மாணவர் சங்கத்தினர் அந்தச் சட்டத்தரணியின் உரை நிகழ்வொன்றை ரத்து செய்தனர்.
புலிகளின் ஏக பிரதிநிதித்துவம் எனும் சித்தாந்தம் பாசிசம் அல்லாமல் வேறென்ன? புலிகள் பாசிசவாதிகள் இல்லையென்றால், இந்த மாணவர்கள் அந்த சட்டத்தரணியின் கருத்தை புலிகள் ஏன் பாசிசவாதிகள் இல்லையென தமது வாதங்களின் மூலம், தர்க்கத்தின் மூலம் தோற்கடித்திருக்க வேண்டுமேயல்லாமல் அவரைத் தடை செய்வதால் அல்ல.
ஒருவரின் கருத்துக்கு எதிரான மேலான கருத்தில்லாதவர்களே அக்கருத்தை வெளியிடுபவரைத் தடை செய்வார்கள்.
வாத விவாதங்கள், தர்க்கங்கள் மூலம் புத்திஜீவிகளை உலகளாவிய பல்கலைக்கழகங்கள் உருவாக்கும் போது, யாழ் பல்கலைக்கழகமோ இந்த மாதிரியான அதரப்பழசான பாசிச சிந்தனைகளினால் 30–40 வருடங்கள் பின்தங்கியுள்ளமை துரதிஷ்டவசமானது.
இவற்றைக் கற்றுக்கொடுக்க வேண்டிய விரிவுரையாளர்களில், பேராசிரியர்களில் ஒரு சிலர் இவ்வாறான முட்டாள்தனமான கருத்துகளை தமது குறுகிய இனவாத அரசியல் நலன்களுக்காக இம்மாணவர்கள் மத்தியில் விதைக்கின்றார்கள்.
1986 ஆம் ஆண்டு யாழ் பல்கலைக்கழக மாணவர் தலைவரான விஜிதரன் புலிகளால் கடத்தப்பட்டு கொல்லப்பட்டார். பின்னர் அந்த அநீதிக்கெதிராக போராடிய மற்றொரு மாணவர் தலைவரான விமலேஸ்வரன் என்பவரும் புலிகளால் கொல்லப்பட்டார்.
கவிதை மற்றும் கட்டுரைகளுக்காக உயரிய விருதான PEN விருது பெற்ற ஒரேயொரு இலங்கையரான தியாகராஜா செல்வநிதி – செல்வி என்கின்ற யாழ் பல்கலைக்கழக மூன்றாம் ஆண்டு மாணவி மற்றும் அவரது நண்பர்களான மனோகரன் தில்லை போன்ற மாணவர்களும் புலிகளால் கடத்தப்பட்டு, அவர்களின் துணுக்காய் சித்திரவதை முகாமில் வைத்து சித்திரவதைகள் புரியப்பட்டு கொல்லப்பட்டனர்.
முறிந்த பனை புத்தகம் எழுதிய மருத்துவ பீட பேராசிரியர் ராஜனி திரணகம இதே யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் வாசலில் வைத்து புலிகளால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார்.
இந்த யாழ் பல்கலைக்கழக மாணவர்களுக்கு மேலே நான் சொன்ன புலிகளால் படுகொலை செய்யப்பட்ட மாணவர்களுக்கும் ராஜனி திரணகம போன்ற பேராசிரியருக்கும் பல்கலை வளாகத்தில் நினைவுச் சிலைகளை எழுப்பி நினைவேந்த துணிவிருக்கின்றதா? என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
1974 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் இந்தப் பல்கலைக்கழகம் அமைவதை எதிர்த்த தமிழ் அரசியல்வாதிகள் 50 வருடங்களுக்கும் மேலாக தமது அரசியல் நலன்களுக்காக உளறுகின்ற இனவான கருத்துகளை அப்படியே உள்வாங்கி கிளிப்பிள்ளைகள் போல் அவர்கள் சொன்னதை மீளச் சொல்வதற்கு கல்வியியளாலர் சமூகம் எதற்கு? பல்கலைக்கழக மாணவர்கள் எதற்கு.? ஒரு மதுபானசாலையில் மது போதையில் நிற்கும் இளைஞன் போதுமே.!
சமூகம் ஒன்றில் திட்டமிட்டு மறைக்கப்படும் சொல்லப்படாதவற்றையும், ஏனையவர்கள் சொல்ல அஞ்சுபவற்றையும் சொல்வதற்கே மாணவர்களும் கல்விச் சமூகமும் தேவை என்றார் அவர்.
அருண் சித்தார்த்
யாழ் மாவட்ட அமைப்பாளர்
சர்வஜன அதிகாரம் கட்சி.
யாழ்ப்பாணம்.
23/03/2026
+9477484246