பயங்கரவாதத் தடுப்புச் சட்டமும் யாழ் நூலக எரிப்பும் – தமிழர்களின் பங்கு

பயங்கரவாதத் தடுப்புச் சட்டமும் யாழ் நூலக எரிப்பும் – தமிழர்களின் பங்கு

இலங்கையில் பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் (Prevention of Terrorism Act – PTA) தொடர்பான மசோதா முதன்முதலில் 1979 ஜூலை 3 ஆம் தேதி அன்றைய உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் கே. டபிள்யூ. தேவநாயகம் அவர்களால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. பின்னர் அது 1979 ஜூலை 20 ஆம் தேதி ஜனாதிபதி ஜே. ஆர். ஜெயவர்த்தன தலைமையிலான அரசாங்கத்தின் கீழ் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
மேலும், இந்தச் சட்டம் உருவாக்கப்பட்ட காலகட்டத்தில் ஜனாதிபதி ஜே. ஆர். ஜெயவர்த்தனவின் அரசியலமைப்பு ஆலோசகராக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் எஸ். ஜே. வி. செல்வநாயகம் அவர்களின் மருமகனான அல்பிரட் ஜெயரட்ணம் வில்சன் (Alfred Jeyaratnam Wilson) பணியாற்றினார். அவர் செல்வநாயகத்தின் மூத்த மகள் சுசீலா செல்வநாயகம் அவர்களின் கணவராவார்.
எஸ். ஜே. வி. செல்வநாயகத்தின் மருமகனான ஏ. ஜே. வில்சன் ஒரு பேராசிரியர் ஆவார். இவர் 1978 ஆம் ஆண்டு முதல் 1984 ஆம் ஆண்டு வரை ஜே. ஆர். ஜெயவர்த்தனவின் அரசியல் ஆலோசகராகப் பணியாற்றினார். ஜே. ஆர். ஜெயவர்த்தனவினால் அறிமுகப்படுத்தப்பட்ட 1978 அரசியலமைப்பின் உருவாக்கச் செயல்முறையிலும் ஜனாதிபதியின் அரசியலமைப்பு ஆலோசகராக வில்சன் அங்கம் வகித்தார்.
இந்தப் பயங்கரவாத தடைச் சட்டம் ஜே ஆர் ஜெயவர்தனவின் அரசியலமைப்பு ஆலோசகரும் இலங்கை தமிழரசுக் கட்சி தலைவர் எஸ்ஜேவி செல்வநாயகத்தின் மருமகனுமான அல்பிறட் ஜெயரட்னம் வில்சன் என்னும் பேராசிரியரால் எழுதப்பட்ட சட்டம் ஆகும்.
1981 ஆம் ஆண்டு யாழ்ப்பாண நூலக எரிப்பு மற்றும் 1983 ஆம் ஆண்டு இனக்கலவரம் ஆகிய இரண்டு சம்பவங்களும், இலங்கையின் உள்நாட்டு யுத்தம் உருவாகக் காரணமான முக்கிய நிகழ்வுகளாக இன்று வரை இலங்கைத் தமிழரசுக் கட்சியாலும் தமிழ் தேசிய அரசியலாலும் அடிக்கடி முன்வைக்கப்படுகின்றன. எனினும், இந்த சம்பவங்கள் நிகழ்ந்த காலகட்டத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சித் தலைவரின் மருமகன் அரசாங்கத்தில் ஜனாதிபதியின் ஆலோசகராக பணியாற்றியமை பற்றிய தகவல் பேசப்படுவதில்லை அல்லது திட்டமிட்டு மறைக்கப்படுகின்றது.
அதேபோன்று, பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் தமிழர்களை ஒடுக்குவதற்காக சிங்கள ஆட்சியாளர்களால் அறிமுகப்படுத்தப்பட்டது என்ற வாதம் பரவலாக முன்வைக்கப்படுகின்ற போதிலும், அந்தச் சட்டத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தவர் தேவநாயகம் என்பதோ அச்சட்டத்தை உருவாக்கியவர் இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரின் மருமகன் ஏஜே வில்சன் என்பதையோ தமிழ் அரசியல் வட்டாரங்கள் பேசுவதில்லை. 😊
இதேபோல், யாழ்ப்பாண நூலக எரிப்பு தொடர்பாக சிங்களவர்களைக் குற்றஞ் சாட்டுபவர்கள் அச் சம்பவத்துடன் தொடர்புடைய தமிழர்கள் குறித்துப் பேசுவதில்லை.
நூலகத்தை எரித்ததாக குற்றம் சாட்டப்பட்டவர்கள் முதல் நாள் இரவு அந்த காலகட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளராக இருந்த தமிழ் அரசியல்வாதி ஒருவரின் வீட்டிலேயே தங்கியிருந்து மதுபானம் அருந்திக் களியாட்டங்களில் ஈடுபட்டிருந்தனர்.
பின்னர் அடுத்த நாள் யாழ் நூலக எரிப்பில் யாழ் மாவட்ட ஐதேக அமைப்பாளரின் ஆதரவாளர்களான தமிழ் காடையர்களும் கலந்து கொண்டனர்.
அந்த அமைப்பாளரின் மகன் அண்மைக்காலம் வரை தமிழ் தேசியம் பேசும் ஒரு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தவர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
யாழ் நூலக எரிப்பில் இரண்டு தரப்பினரின் பங்கும் இருந்ததைக் கூறும் வரலாற்றுப் பார்வைகளும் ஆய்வுகளும் பொதுவெளியில் இடம்பெறாமல் சூட்சுமமாக தமிழ் அரசியல்வாதிகளால் மூடி மறைக்கப்பட்டது.
மேலும், கவனிக்கப்பட வேண்டிய இன்னொரு முக்கிய விடயம் என்னவென்றால், யாழ் நூலக எரிப்பும் 1983 இனக்கலவரமும் நடைபெற்ற காலகட்டத்தில் அதிகாரத்தில் இருந்தது ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சி என்பதாகும். அதே இரண்டு சம்பவங்களும் இன்று வரை தமிழ் அரசியல் கட்சிகளால் உள்நாட்டு யுத்தத்தின் முக்கிய காரணங்களாக குறிப்பிடப்படுகின்றன. ஆனால், பிந்திய காலங்களில் அதே ஐக்கிய தேசியக் கட்சிக்கே அந்த தமிழ் அரசியல் கட்சிகள் தொடர்ச்சியாக தமது ஆதரவையும் வழங்கியுள்ளன. அந்தக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர்களையே கூட பல சந்தர்ப்பங்களில் ஆதரித்துள்ளன.
இந்த அரசியல் வரலாற்றை முழுமையாக தெரிந்து கொள்ளாத சாமான்ய தமிழன் தமிழ் அரசியல் கட்சிகள் முன்வைக்கும் தமிழர்கள் எதிர் சிங்களவர்கள் என்னும் சூழ்ச்சியில் சிக்கி கொள்வதுடன் சிங்கள மக்களை தமிழர்களுக்கு எதிரிகளாக கட்டமைக்கும் தமிழ் அரசியல்வாதிகளின் இனவாத முயற்சிகளுக்குப் பலிக்கடாவாகுவர்.
அத்தோடு தமிழ் கட்சிகளால் மறைக்கப்படும் வரலாற்றை தோண்டியெடுத்து தெரிந்து கொள்ளும் அன்றே இந்த நாட்டின் தமிழ் மக்களுக்கு உண்மையான விடுதலை கிடைக்கும்.
அருண் சித்தார்த்
யாழ்ப்பாணம்
10/06/2026

Post Your Comment

WOULD YOU LIKE TO BECOME ONE OF OUR DONORS?

Lorem ipsum dolor sit amet, consectetur adi piscing elit, sed dorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit.
CONTACT US